முருகேசன் கைதுசெய்யப்பட்டவர் PT
குற்றம்

நாமக்கல்: 50க்கும் மேற்பட்ட பெண்களின் பெயரில் போலி ஆபாச வலைதள கணக்குகள்! மோசடியில் ஈடுபட்டவர் கைது!

நாமக்கல்லில் 50க்கும் மேற்பட்ட பெண்களின் பெயரில் போலி முகநூல், ட்விட்டர் கணக்குகளைத் தொடங்கி, அவர்களைப் பற்றி ஆபாசமாகப் பதிவிட்டவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

PT WEB

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை ஊராட்சிக்கு உட்பட்டது வி.மேட்டூர். இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பெண்களுடைய புகைப்படங்களுடன் கூடிய போலி முகநூல் மற்றும் ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டு, அதில் அப்பெண்கள் பற்றிய தவறான படங்களும் ஆபாசமான வார்த்தைகளும் பதிவு செய்யப்பட்டு, அவ்வூரில் உள்ள இளைஞர்களுக்கே அனுப்பப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

பெரும்பாலும் இளைஞர்களைக் குறிவைத்து பகிரப்பட்ட இந்த சமூக வலைதள பக்கங்கள் அவ்வூர் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அந்தச் சமூக வலைத்தள பக்கங்களில் தங்கள் உறவுக்கார பெண்கள் பிற ஆண்களுடன் ஆபாசமாக புகைப்படம் அனுப்பியது போலவும், பேசியது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்ததால் இதுதொடர்பாக குமாரபாளையம் காவல் நிலையத்தில் அவ்வூர் மக்கள் புகார் அளித்தனர்.

அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், இந்தச் செயலில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு அவரை ஆஜர் செய்து, பின்பு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.