குற்றம்

நாமக்கல்: வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த லாரி கடத்தல் - சிறையில் நண்பர்களான மூவர் கைது

நாமக்கல்: வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த லாரி கடத்தல் - சிறையில் நண்பர்களான மூவர் கைது

webteam

குமாரபாளையம் அருகே லாரி கடத்தியதாக சிறை நண்பர்களாகிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். மணல் பாரம் ஏற்றிச் செல்லும் லாரியின் உரிமையாளரான இவர், கடந்த 24 ஆம் தேதி மாலை லாரி ஓட்டுநர் முனுசாமி மற்றும் தினேஷ்குமார் வீட்டு வாசலில் லாரியை நிறுத்திவிட்டு இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், அதிகாலையில் எழுந்த தினேஷ்குமார், வெளியே சென்று பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த லாரி காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து குமாரபாளையம் காவல் நிலையத்தில் தினேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே எடப்பாடி செல்லும் சாலையில் போலீசார் வாகன தணிக்கை ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் மற்றும் லாரியை தடுத்து நிறுத்திய போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்லக்காபாளையம் பகுதியில் காணாமல் போன தினேஷ் குமாரின் லாரி என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து லாரி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்தனர். இதில், லாரி திருட்டில் ஈடுபட்டவர்கள் பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த கவியரசு, திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஜேசுராஜ், மற்றும் கோவையைச் சேர்ந்த கண்ணன் என்பது தெரியவந்த, சிறையில் நண்பர்களான மூன்று பேரும் லாரி கடத்தலில் ஈடுபட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார், குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.