செய்தியாளர்: நவ்பல் அஹமது
கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை அருகே உள்ள பயணம் பகுதியைச் சேர்ந்த சசி (54) என்பவர், அரசு பேருந்து நடத்துநராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று நாகர்கோவிலில் இருந்து சிறமடத்திற்குச் சென்ற பேருந்தில் பணியில் இருந்தார். அப்போது நடத்துனர் சசி, பேருந்தில் பயணித்த பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அடுத்த நிறுத்தத்தில் இறங்கி பள்ளிக்குச் செல்லாமல் வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர், ஊர் மக்களுடன் சேர்ந்து மீண்டும் அந்த பஸ் ஞானையாபுரம் வந்த போது பேருந்தை சிறைபிடித்தனர். இதைத் தொடர்ந்து நடத்துனர் சசியை பிடித்து அடிக்கத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பூதப்பாண்டி போலீசார், சசியை மீட்டு நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து அவர்மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இதையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.