குற்றம்

“எனக்கு குழந்தைகள் இருக்கு;என்ன விட்டுடுங்க”: வன்கொடுமை செய்தவர்களிடம் மன்றாடிய நாகை பெண்

“எனக்கு குழந்தைகள் இருக்கு;என்ன விட்டுடுங்க”: வன்கொடுமை செய்தவர்களிடம் மன்றாடிய நாகை பெண்

webteam

நாகையில் கோயிலில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகை வெளிப்பாளையம் காமராஜர் காலனியைச் சேர்ந்த பெண் ஒருவர் கட்டடத்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கணவரை இழந்தவர். இதனால் பாதுகாப்பிற்காக அதே பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் இரவில் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு அந்த பெண் சகோதரியின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் வழிமறித்து தாக்கி அப்பகுதியில் இருந்த கோயிலுக்கு அழைத்துச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து பெண் அளித்த புகாரில் போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, “இரவு பணி முடித்து 11 மணிக்கு வீடு திரும்பி கொண்டிருந்தேன். அப்போது என்னை பின் தொடர்ந்து வந்தவர்கள் என்னை வாயை பொத்தி, அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

‘எனக்கு குழந்தைகள் இருக்கு.. என்ன விட்டுடுங்க' என்று கதறினேன். நான் வேலைக்கு சென்ற கூலிப்பணத்தைக்கூட அவர்களிடம் கொடுத்து விட்டுவிடுமாறு மன்றாடி கதறினேன். ஆனால் 12.30 மணியில் இருந்து 3.00 மணிவரை விடாமல் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கூறும்போது ”குழந்தைகள் இருக்கு... விட்டுடுங்க என்று கதறும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது” என்றார்.