மதுரையில் செல்போன் கடையை உடைத்து கைலியால் முகத்தை மூடியபடி, திருடர்கள் பணம் மற்றும் செல்போனை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
மதுரை சிலைமான் பேருந்து நிலையம் அருகே ராஜா என்பவர் செல்போன் பழுது மற்றும் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இங்கு செல்போன் உதிரி பாகங்கள், மற்றும் புதிய ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு வழக்கம்போல் பணிகளை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், இரவு கடையின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 30,000 ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர். இது குறித்த காட்சிகள் அங்கே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
அதில் திருடர்கள் கண்காணிப்பு கேமராவில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க தாங்கள் அணிந்திருந்த கைலியால் முகத்தை மறைத்துக் கொண்டும், எதிர்புறம் கண்காணிப்பு கேமரா இருப்பது கூட தெரியாமல் அவர்கள் திருடியதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன.
அடுத்தநாள் காலையில் கடையில் இருந்த பொருட்கள் திருடு போனதை அறிந்த ராஜா, சிலைமான் காவல்நிலையத்தில் சிசிடிவி காட்சிகளுடன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர். அடிக்கடி அப்பகுதியில் திருட்டுச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும் நிலையில் காவல்துறையினர் ரோந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.