Saraswati Vaidya murder Twitter
குற்றம்

மும்பை: மூட்டை மூட்டையாக பிளாஸ்டிக் பைகளில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல்! என்ன நடந்தது? பகீர் தகவல்கள்!

லிவிங் டூகெதரில் தன்னுடன் வாழ்ந்த பெண்ணை படுகொலை செய்த மும்பை நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர கொலையின் முதற்கட்ட விசாரணையில் அந்நபர் அப்பெண்ணின் உடல் பாகங்களை அரைத்து, வேகவைக்க முயன்றது தெரியவந்துள்ளது.

Justindurai S

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை அடுத்த மிரா ரோடு கிழக்கு கீதா நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் (வீட்டு எண் 704) வசித்து வந்தவர்கள் சரஸ்வதி வைத்யா (வயது 32) மற்றும் மனோஜ் சனே (56). காதலர்களான இவர்கள் திருமணம் செய்யாமல் கடந்த 3 ஆண்டுகளாக இந்த குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

Murder

இந்தநிலையில் கடந்த புதன்கிழமை இரவு இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுபற்றி மனோஜிடம் அக்கம் பக்கத்தினர் கேட்டபோது, அதைச் சரிசெய்வதாகக் கூறியுள்ளார். மனோஜின் நடவடிக்கையில் சந்தேகத்தை உணர்ந்த அக்கம் பக்கத்தினர் நயா நகர் போலீஸூக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று வீட்டில் சோதனையிட்ட போது வீட்டுக்குள் சடலம் இருப்பதுபோல துர்நாற்றம் வீசியுள்ளது. சரஸ்வதி வைத்யாவும் அங்கு இல்லையென காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீஸ், தங்கள் பாணியில் குறுக்கு விசாரணையை தொடங்கவே... ஒருகட்டத்தில் மனோஜ் சனே, சரஸ்வதியை தான் கொலைசெய்து அவர் உடலை துண்டு துண்டாக வெட்டியதை ஒப்புக்கொண்டுள்ளார். அதற்குப்பின் தான் இச்சம்பவம் குறித்த பரபரப்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

Saraswati Vaidya murder

தொடக்கத்தில் படுக்கையறையில் பிளாஸ்டிக் பை மற்றும் ரத்தக்கறை படிந்த ரம்பத்தை போலீஸார் கண்டுள்ளனர். அதைவைத்து தடயங்களை அழிக்க மனோஜ் சனே பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி அவரிடம் விசாரித்ததில் கொல்லப்பட்ட சரஸ்வதியின் உடலை துண்டுத் துண்டாக வெட்டியதுடன், சில உடல் உறுப்புகளை பிரஷர் குக்கரில் வேகவைத்து பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி வெளியே வீசியது தெரியவந்துள்ளது

சில உடல் பாகங்களை மிக்சியில் போட்டு அரைத்தும் உள்ளார். மேலும் சில உடல் துண்டுகள் வாளி மற்றும் டப்பாக்களிலும் வைக்கப்பட்டு இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மீட்கப்பட்ட உடல் உறுப்புகளை போலீசார் ஒரு பாலிதீன் கவரில் சுற்றி ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சரஸ்வதி வைத்யாவை கொலை செய்வதற்கு பயன்படுத்திய ஆயுதம், உடல் பாகங்களை அரைக்க பயன்படுத்திய மிக்சி, வேகவைக்கப் பயன்படுத்திய குக்கர் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

Saraswati Vaidya murder

விசாரணைகளை தொடா்ந்து, மனோஜ் கைது செய்யப்பட்டாா். அவரை வருகிற 16-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. முழுமையான விசாரணைக்கு பிறகே கொலைக்கான காரணம் தெரியவரும் என்று நயா நகர் போலீசார் தெரிவித்தனர்.

மிகக்கொடூரமான இந்தக் கொலை சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.