வேடசந்தூரில் நூற்பாலை அதிபரிடம் ரூ.3 கோடி மதிப்புள்ள துணிகளை வாங்கி மோசடி செய்ததாக மும்பையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பூபதி என்பவர் பாலகங்கா என்ற பெயரில் நூற்பாலை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவருக்கு மும்பையைச் சேர்ந்த பாரத்ஜித்தாபாய் பட்டேல், கிரண் குமார், சர்தார பட்டேல், மற்றும் பிங்கோஷ் ஆகியோர் அறிமுகமாகினர். இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து பூபதியிடம் கடந்த 2021 வருடம் ரூ.3 கோடி மதிப்புள்ள துணிகளை விலைக்கு வாங்கி சென்றுள்ளனர்.
ஒரு மாதத்தில் பணம் தருவதாகக் கூறி துணிகளை வாங்கிச் சென்றவர்கள் அதன்பின் பதில் ஏதும் கூறாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். பூபதியால் இவர்களிடம் இருந்து பணம் வாங்க முடியவில்லை. மேலும் பலமுறை செல்போன் மூலம் தொடர்பு கொண்டாலும் சரியாக பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக உணர்ந்த பூபதி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த மாதம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனிடையே பிங்கோஷ் செல்போனை ஆய்வு செய்த போது அவர் மும்பையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மும்பைக்கு விரைந்த குற்றப்பிரிவு போலீசார் அங்கு பதுங்கி இருந்த பிங்கோஷை கைது செய்து திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.