குற்றம்

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது திமுக எம்.எல்.ஏவின் தந்தை துப்பாக்கிச்சூடு

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது திமுக எம்.எல்.ஏவின் தந்தை துப்பாக்கிச்சூடு

webteam

அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்ததன் காரணமாக ஏற்பட்ட தகராறில் ரியல் எஸ்டேட் அதிபரின் ஆதரவாளர்கள் மீது திருப்போரூர் எம்.எல்.ஏவின் தந்தை துப்பாக்கிச்சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் தொகுதியின் திமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் இதயவர்மன். இவரது தந்தை லட்சுமிபதி. இவர்கள் வீட்டின் அருகே உள்ள அரசு நிலத்தை சாலை போடுவதற்காக ரியல் எஸ்டேட் அதிபர் தாண்டவமூர்த்தியும் குமார் என்பவரும் ஆக்கிரமிப்பு செய்வதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு இருந்தது. இதனால் இதயவர்மன் குடும்பத்திற்கும் தாண்டவமூர்த்திக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், பிரச்னைக்குரிய இடத்தில் தாண்டவமூர்த்தி அடியாட்களை வைத்து சாலை போட வந்துள்ளனர். இதைப்பார்த்த லட்சுமிபதி அவர்களை தடுக்க முற்படுகிறார். அப்போது தாண்டவமூர்த்தியின் ஆட்கள் லட்சுமிபதி மீது அரிவாளால் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து லட்சுமிபதி தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரியல் எஸ்டேட் ஆதிபரின் ஆதவாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

ஆனால், குண்டு தவறி அங்கு இருந்த காரின் மீது பட்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர்சேதம் ஆகவில்லை. இதையடுத்து ரியல் எஸ்டேட் அதிபரின் ஆதரவாளர்கள் திருப்போருர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.