குற்றம்

8 நாள் தேடுதல் வேட்டை: மார்பிள் குடோனில் புதைக்கப்பட்ட வழக்கறிஞரின் உடல் மீட்பு!

8 நாள் தேடுதல் வேட்டை: மார்பிள் குடோனில் புதைக்கப்பட்ட வழக்கறிஞரின் உடல் மீட்பு!

webteam

எட்டு நாள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் காணாமல் போன வழக்கறிஞர் மார்பிள் குடோன் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார். அந்த குடோன் அவரது நெருங்கிய நண்பருக்கு சொந்தமானது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தர்மேந்திர சதாரி. எட்டு நாட்களுக்கு முன்பு தன்னுடைய நண்பரின் மார்பிள் குடோனுக்கு இரவு விருந்து எனச் சென்ற இவர் காணாமல் போனார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்கறிஞரை தேடத் தொடங்கினர். அவரது செல்போன் சிக்னலை ஆய்வு செய்த போலீசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அது ஒரு நடுவழியில் நின்றது. செல்போன் சிக்னல் கடைசியாக நின்ற இடத்தில் இருந்து 6 கிமீ தொலைவில் வழக்கறிஞரின் பைக் கண்டுபிடிக்கப்பட்டது. யாரோ வழக்கறிஞரை கடத்தி சென்று இருக்கலாம் என போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

மோப்ப நாய்கள், ட்ரோன் கேமராக்கள் என அதிரடியாக போலீசார் தேடத் தொடங்கினர். கடைசியாக நண்பர் விக்கியின் குடோனுக்கு தான் சென்றார் என்பதால் அவர் மீதும் கண் வைத்தது போலீஸ். ஆனால் நண்பனை காணவில்லையே என விக்கியும் பதட்டமாகவே தேடியுள்ளார். இதற்கிடையே வழக்கறிஞரின் குறிப்புகள் அடங்கிய நோட்டு ஒன்றை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்தனர். அதில் விக்கிக்கு ரூ.50 லட்சம் வரை தான் கடன் கொடுத்திருப்பதாக வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. எனவே குடோன் உரிமையாளர் விக்கியை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

முதலில் தான் சோதனைக்கு தயார் என தெரிவித்த விக்கி, கடைசி நேரத்தில் உடல்நிலை சரியில்லை என்பதால் அந்த சோதனை
செய்துகொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். இதனால் அதிகம் சந்தேகம் ஏற்படவே விக்கியின் குடோனை சல்லடை போட்டு தேடியது
போலீஸ்.

தேடுதலின் முடிவில் அடுக்கப்பட்ட மார்பிள் கற்களுக்கு கீழே வழக்கறிஞரின் உடலை போலீசார் மீட்டனர். உடலை கண்டுபிடிக்க முடியாத
அளவுக்கு விக்கி மறைத்திருந்தாலும், அதிலிருந்து வெளியேறிய துர்நாற்றத்தால் அவர் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அரசியல் காரணங்களுக்காக வழக்கறிஞர் கடத்தப்பட்டிருக்கலாம் என பல கருத்துகள் கிளம்பி இருந்த நிலையில் பணப்பிரச்னைகாரணமாக தன்னுடைய நெருங்கிய நண்பர் மூலமாகவே வழக்கறிஞர் கொல்லப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்