குற்றம்

காஞ்சிபுரம்: ராயல் என்ஃபீல்ட் வாகன உதிரி பாகங்களை ஏற்றிச் சென்ற மினி வேன் கடத்தல்

காஞ்சிபுரம்: ராயல் என்ஃபீல்ட் வாகன உதிரி பாகங்களை ஏற்றிச் சென்ற மினி வேன் கடத்தல்

kaleelrahman

ராயல் என்ஃபீல்ட் இருசக்கர வாகனத்தின் உதிரி பாகங்களை ஏற்றிச் சென்ற மினி வேன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டது.

ஒரகடத்தில் இயங்கிவரும் இருசக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலைகளிலிருந்து இருசக்கர வாகனத்தின் ஹேண்ட் பார் உதிரிபாகங்களை மினி வேன் மூலம் ஓசூருக்கு வேலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த ஓட்டுனர் மஞ்சுநாதன் என்பவர் எடுத்துச் சென்றார்.


அப்போது காஞ்சிபுரம் தாலுகா காவல் எல்லைக்கு உட்பட்ட கீழம்பி என்ற பகுதியில் மினி வேனை நிறுத்திவிட்டு உணவு அருந்திக் கொண்டிருந்தபோது மூன்று நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து நிறுத்தி வைத்திருந்த மினி வேனை கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து வேன் ஓட்டுநர் காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொழிற்சாலையிலிருந்து உதிரி பாகங்களை எடுத்துச்செல்லும் லாரிகள் தொடர்ச்சியாக கடத்தப்பட்டு வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்து பொருட்களை ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநரை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு லாரியை கடத்திச் சென்றனர்.


அதே போல சில மாதங்களுக்கு முன்பு பிரபல செல்போன் தொழிற்சாலையிலிருந்து செல்போன்களை ஏற்றிச்சென்ற லாரிகளை கொள்ளையர்கள் இருமுறை தொடர்ச்சியாக கடத்திச் சென்றனர். அதன் மதிப்பு 10 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்பட்டது. அதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக அளவு சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது