செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியான தேவராஜபுரம், வீரணமலை ஆகிய மலை கிராமங்களுக்கு வாணியம்பாடியில் இருந்து தினந்தோறும் மினி பேருந்து சென்று வருகிறது.
இந்நிலையில், தமிழக - ஆந்திர மாநில எல்லையில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. அதனை மினி பேருந்து மூலம் கொண்டு வந்து வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் விற்பதாக வருவாய்த் துறையினர், காவல்துறையினர் மற்றும் வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் வனத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் நான்கு சோதனைச் சாவடிகளை அமைத்து, சாராய கடத்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டனர், அதனை தொடர்ந்து வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் வாணியம்பாடி நகர காவல் துறையினர் ஆய்வு மேற்க்கொண்டனர். அப்போது தமிழகத்திலிருந்து, ஆந்திராவிற்கு சென்று வரக்கூடிய தனியார் மினி பேருந்தில் சோதனை மேற்கொண்ட போது, அதில், சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சாராய பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது
இந்நிலையில், உடனடியாக தனியார் மினி பேருந்தை பறிமுதல் செய்த காவல் துறையினர், மினி பேருந்து ஓட்டுநர் ஏமாந்திரி, மற்றும் நடத்துநர் சோபன் பாபு ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.