செய்தியாளர்: டி.சாம்ராஜ்
தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக சமூக விரோதிகள் ஊடுருவியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சத்தியமங்கலம் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீசார், காந்திநகர் என்ற இடத்தில் திடீரென மெகா குற்றத்தடுப்பு வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனைக்குட்படுத்தினர். சந்தேகப்படும்படியாக வந்த வாகனங்களின் பதிவு எண், உரிமையாளர் பெயர், அதற்குரிய ஆர்சி புத்தகம் ஆகியவற்றை சரிப்பார்த்து அனுமதித்தனர்.
மேலும் வெளியூர் நபர்களை கண்காணிக்க ஆதார் கார்டு விவரங்கள் சரிபார்க்கப்பட்டன. பெரும்பாலன வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம் இன்றி வந்ததும் தெரியவந்தது. ஹெல்மெட் அணியாமல் ஓட்டியது, 2க்கும் மேற்பட்டோருடன் வாகனம் ஓட்டியது போன்றவற்றில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவரை பிடித்து சந்தேக அடிப்படையில் சோதனையிட்டபோது, அவரது பையில் உலர வைக்கப்பட்ட மான் இறைச்சி பதுக்கியது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர் ஆசனூரைச் சேர்ந்த பொம்மன் (23) என்பதும் இறந்த மானின் உடல் பாகங்களை எடுத்து உலர வைத்து விற்பனைக்கு கொண்டு சென்றதும் உறுதியானது. இதையடுத்து அவர் வைத்திருந்த 3 கிலோ மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வாகனத் தணிக்கையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.