மணப்பாறை அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.
மணப்பாறை அடுத்த கே.உடையாபட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருடைய மனைவி, ஆடு மேய்த்து விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இதே ஊரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான ஜான் பிரிட்டோ என்பவர் வந்த இருசக்கர வாகனம் ஆட்டின் மீது மோதியது, இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜான் பிரிட்டோ தான் வைத்திருந்த இந்திய அளவில் உரிமம் பெற்ற கை துப்பாக்கியை எடுத்து வந்து ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி ஜெயசீலா, ராஜ்குமாரின் அண்ணன் மனைவி பிரியங்கா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ராஜ்குமார் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் ஜான் பிரிட்டேவை கைது செய்த போலீசார், தவறான முறையில் திட்டியது, கொலை மிரட்டல், ஆயுதங்களை வைத்து மிரட்டியது என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர், கடந்த 2001 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் வேலை பார்த்ததாகவும் 2020 ஆம் ஆண்டு ராணுவத்தல் இருந்து ஓய்வு பெற்றதும், பின்னர் மொண்டிப்பட்டியில் உள்ள காகித ஆலையில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரிடமிருந்த துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.