சென்னை கீழ்ப்பாக்கம் அருகே தங்க நகைகளை தயாரித்து விற்பனை செய்யும் கடையில், கடந்த ஒன்றரை மாதங்களாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சைபுல் ரஹ்மான் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி சைபுல் ரகுமான் டீ குடிக்க செல்வதாகக் கூறிச் சென்ற நிலையில் அதன் பிறகு கடைக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உரிமையாளர் கடையில் உள்ள அறையை சோதனை செய்துள்ளார்.
அப்போது 20 சவரன் நகை கம்பி காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சைபுல் ரஹ்மான் அதை மறைத்து வைத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து நகையை மீட்டுத்தரக் கோரி கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் உரிமையாளர் புகார் அளித்தார். புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் தனிப்படை போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரது செல்போன் எண் மற்றும் அவர் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர், மேற்குவங்க மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார், மேற்குவங்க மாநிலத்திற்குச் சென்று அம்மாநில போலீசாரின் உதவியுடன் சைபுல் ரஹ்மானை கைது செய்தனர். அப்போது 100க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் போலீசாரை சூழ்ந்து கொண்டு சினிமா பட பாணியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 20 சவரன் நகையை பறிமுதல் செய்து விமானம் மூலமாக அவரை சென்னைக்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சைபுல் ரஹ்மான் சென்னை சவுகார்பேட்டை, கீழ்ப்பாக்கம் மற்றும் ஹைதரபாத்தில் உள்ள நகை கடைகளில் பணிக்கு சேர்வது போல் சேர்ந்து சில நாட்கள் தங்கி இருந்து நகைகளை திருடிச் செல்வதை வாடிக்கையாக வைத்திருப்பது தெரியவந்தது. வறுமையான குடும்பம் என்பதால் நகையை திருடி வீட்டிற்கு செலவு செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சைபுல் ரஹ்மானை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.