டெல்லி மடிப்பூர் ஜே.ஜே.காலனியில் வசித்துவந்தவர் விண்ணு என்கிற வினோத். 29 வயதான இவரிடம், பஸ்சிம் விகார் பகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரீஷியன் தொழில் செய்து வரும் முகமது அப்துல்லா என்பவர் ரூ.1,500 கடனாகப் பெற்றதாகத் தெரிகிறது. கடன் தொகையைக் கொடுத்த வினோத், தொடர்ந்து முகமது அப்துல்லாவிடம் அதுகுறித்து கேட்டுள்ளார். அதேசமயம், வினோத்துக்கு கொடுக்க வேண்டிய 1,500 ரூபாய் கடன் பாக்கியை அப்துல்லா கொடுக்காமல் காலம் கடத்தி உள்ளார். இதுதொடர்பாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று, கடனை வசூலிப்பதற்காக அப்துல்லாவின் வீட்டுக்கு வினோத் சென்றுள்ளார்.
அங்கு அப்துல்லா இல்லாததால் கோபமடைந்த அவர், அவருடைய குடும்பத்தினரை வினோத் திட்டிவிட்டு திரும்பிச் சென்றிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட அப்துல்லா, மறுநாள் வினோத்தின் வீட்டுக்குச் சென்று அவரை கத்தியால் பலமுறை குத்திக் கொன்றுள்ளார். கடந்த 22ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து விசாரணை நடத்தினர். அதன்படி, பஸ்சிம் விகார் பகுதியைச் சேர்ந்த முகமது அப்துல்லா என்ற நபர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். விசாரணையில், 1,500 ரூபாய் கடன் தகராறில் இந்த கொலை நடந்திருப்பதிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.