குற்றம்

காரில் அடிபட்டு உயிரிழந்த சிறுவனை கால்வாயில் வீசிய ஓட்டுநர்..!

காரில் அடிபட்டு உயிரிழந்த சிறுவனை கால்வாயில் வீசிய ஓட்டுநர்..!

webteam

நொய்டாவில் தனது காரில் சிக்கி உயிரிழந்த 10 வயது சிறுவனின் உடலை கால்வாயில் வீசி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

நொய்டாவின் மயூர் விஹார் யமுனா காதர் பகுதியைச் சேர்ந்தவர் ஜும்மான். இவர் ரிக்‌ஷா ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த ஞாயிற்று கிழமை வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த இவரது 10 வயது சிறுவன் காஃபர் திடிரென்று காணாமல் போனார். 

இதையடுத்து சிறுவனின் தந்தை ஜும்மான் மற்றும் உறவினர்கள் சிறுவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து ஜும்மான் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். 

அப்போது அடிபட்ட குழந்தையோடு ஒருவர் காரில் பயணித்ததாக இளைஞர் ஒருவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், இளைஞர் குறிப்பிட்ட காரை கண்டுபிடித்து ஓட்டுநரை விசாரணை செய்தனர். அப்போது குற்றத்தை ஓட்டுநர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். 

இதுகுறித்து டிஜிபி ஜஸ்மீட் சிங் கூறுகையில், “சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளோம். அவரின் பெயர் மதன்லால். அவர் டெல்லியில் கார் ஓட்டுநராக பணிபுரிகிறார். சிறுவனின் வீட்டருகே அவர் காரை ரிவர்ஸ் எடுக்கும்போது சிறுவனின் மீது கார் ஏறியுள்ளது. இதையடுத்து சிறுவனை காரில் கொண்டு போய் அப்பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் உடலை வீசியுள்ளார். சிறுவனின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

சிறுவன் இறந்துவிட்டான் என நினைத்து நான் பீதி அடைந்துவிட்டேன். கைது செய்யப்பட்டுவிடுவமோ என்ற அச்சத்தில் அதில் இருந்து தப்பிக்க சிறுவனின் உடலை கொண்டு சென்று கால்வாயின் போட்டதாக கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.