குற்றம்

‘நான் அவன் இல்லை’ பாணியில் 40 பெண்களிடம் கைவரிசை காட்டிய மும்பை இளைஞர் கைது

‘நான் அவன் இல்லை’ பாணியில் 40 பெண்களிடம் கைவரிசை காட்டிய மும்பை இளைஞர் கைது

நிவேதா ஜெகராஜா

மும்பையில் மேட்ரிமோனி தளங்கள் மூலம் சுமார் 40 பெண்களை ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில் விஷால் சுரேஷ் (எ) அனுராக் சவன் (34 வயது) என்ற நபர், மேட்ரிமோனி வழியாக சுமார் 40 பெண்களை ஏமாற்றியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ள விஷால், பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண்களை மேட்ரிமோனி வழியாக கண்டுபிடித்து அவர்களுடன் நட்பு பாராட்டி, இறுதியில் அவர்களிடம் பணம் பறித்ததாக சொல்லப்படுகிறது. ஏமாந்த பெண்களில் கிட்டதட்ட 30 பேரிடம் லேட்டஸ்ட் மாடல் ஐஃபோன் வாங்கித்தருவதாக கூறி விஷால் பணம் பறித்தது தெரியவந்துள்ளது. விஷால் மீது மோசடி வழக்கு மட்டுமன்றி பாலியல் வன்கொடுமைக்கான வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம், 28 வயது பெண்னொருவர் விஷால் மீது மோசடி வழக்கு பதிவுசெய்திருந்திருக்கிறார். அந்தவழக்கை ஆராய்ந்தபோதுதான் காவல்துறையினருக்கு பல வழக்குகள் குறித்து தெரியவந்துள்ளன. இதுதொடர்பான தனது வழக்கில் அப்பெண் `மேட்ரிமோனி வழியாக என்னிடம் பேசத்தொடங்கிய அவர், சுமார் ரூ.2.25 லட்சம் வரை என்னிடமிருந்து பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டார். ஷேர் மார்க்கெட்டில் அதை இன்வெஸ்ட் செய்யப்போவதாக கூறி அவர் என்னை ஏமாற்றினார்’ எனக் குறிப்பிட்டிருந்திருக்கிறார். அந்தவழக்கின் அடுத்தடுத்த நிலைகளை ஆராய்ந்தபோது மேற்கொண்டு விவரங்கள் வெளிவந்துள்ளன.

அந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரியொருவர், பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில் “தொழில்நுட்ப ரீதியாக இந்த வழக்கை விசாரித்தோம். அப்போது விஷாலின் புகைப்படங்கள், மொபைல் ஃபோன் ரெக்கார்டர்ஸ் போன்றவற்றை ஆராய்ந்தோம். அவருடைய மொபைல் சிம், வேறொருவர் பெயரில், வேறொருவரின் அடையாள அட்டையுடன் இருந்தது. இவருடைய புகைப்படங்களும், வெவ்வேறு விஷயங்களில் தொடர்புடையதாக இருந்தன. விலாசமும் தவறாக இருந்தது. இவருக்கு எதிராக புகாரளிக்க பல பெண்கள் முன்வருவதில்லை என்பதே சிக்கல். இவர், கடந்த 2017-ம் ஆண்டின்போதே வேறொரு பெண்ணொருவர் அளித்த மோசடி புகாரின் அடிப்படையில் கைதாகி இருந்தார். அப்பெண்ணிடம் அவர் ரூ.17 லட்ச மோசடி செய்திருந்ததாக சொல்லப்பட்டிருந்தது. அப்போதே அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் அந்த தொகையை திருப்பி அளித்தபின்னரே விடுவிக்கப்பட்டார்” என தெரிவித்திருக்கிறார்.