குற்றம்

கோவையில் சாதிக்கொடுமை: அரசு ஊழியரை காலில் விழவைத்து மன்னிப்புக் கேட்கவைத்த கொடூரம்

கோவையில் சாதிக்கொடுமை: அரசு ஊழியரை காலில் விழவைத்து மன்னிப்புக் கேட்கவைத்த கொடூரம்

Sinekadhara

கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியம் ஒற்றர்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ‌கிராம நிர்வாக அலுவலகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த அரசு ஊழியரை, சாதியை கூறி தகாத வார்த்தைகளால் திட்டி காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சமீரான் புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார்.

கோபரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர், சொத்து விவரங்களுக்கான சரிபார்ப்புக்காக ஒற்றர்பாளையம் கிராம நிர்வாக அலுவலத்துக்கு சென்றுள்ளார். அப்போது ஆவணங்கள் சரியாக இல்லை என்றும், சரியான ஆவணங்களை தருமாறும் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி கூறியுள்ளார்.

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலரை கோபிநாத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இடையில் குறுக்கிட்ட கிராம நிர்வாக அலுவலக தண்டல்காரர் முத்துசாமி, அரசு அலுவலரிடம் தகாத வார்த்தைகளை பேசவேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் கோபப்பட்ட கோபிநாத், பட்டியலினத்தைச் சேர்ந்த முத்துசாமியை சாதிப்பெயரை கூறி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

மேலும், தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்காவிட்டால், பொய் குற்றச்சாட்டு கூறி வேலையைவிட்டு நீக்கி விடுவதாக கோபிநாத் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துசாமி, கோபிநாத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். கண்ணீர்விட்டு அழுதபடி காலில் விழுந்த முத்துசாமியை அங்கிருந்தவர்கள் தடுத்தனர். தனக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி, கண்ணீர்விட்டு குமுறி அழுத முத்துசாமியை அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தினர்.

சாதிக்கொடுமையால் அரசு அலுவலருக்கு நேர்ந்த கொடூர சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரானை தொடர்புகொண்டு கேட்டபோது, கிராமநிர்வாக அலுவலகத்தில் நடந்த சாதிக்கொடுமை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதியதலைமுறையிடம் தெரிவித்துள்ளார்.