குற்றம்

“வேலை வேண்டுமென்றால் ஏழைபோல் தெரிய வேண்டும்” - நூதனமாக பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

webteam

வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று பெண்ணிடம் நூதன முறையில் ஒன்றரை சவரன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை ராமாபுரம் மருது நகரில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம்(45). இவர் கடந்த 12 ஆம் தேதி ஹவுஸ் கீப்பிங் பணி தேடி அங்குள்ள தனியார் கம்பெனிகள் முழுவதும் கேட்டுள்ளார். ஆனால் பணி கிடைக்காத வேதனையில் பஞ்சவர்ணம் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் பஞ்சவர்ணத்திடம் அசோக்நகர் பார்சல் அலுவலகத்தில் பணி வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய பஞ்சவர்ணம், அந்த நபருடன் இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

பின்னர் கே.கே நகர் ஈ.எஸ்.ஐ மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பஞ்சவர்ணத்திடம் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் வேலை கிடைக்க வேண்டும் என்றால் கழுத்தில் நகை எதுவும் இல்லாமல் ஏழை போல் காட்சியளிக்க வேண்டும் எனக்கூறி பஞ்சவர்ணம் அணிந்திருந்த ஒன்றரை சவரன் நகை மற்றும் 2000 ரூபாய் பணத்தை பெற்று கொண்டு அலுவலகத்திற்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த நபர் வராததால் பஞ்சவர்ணம் ஏமாந்தது தெரியவந்ததையடுத்து கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.