கொலை செய்யப்பட்ட சேகர் புதிய தலைமுறை
குற்றம்

சென்னை | ‘தூக்கத்தில் ஏன் எழுப்பிவிடற...?’ - மதுபோதையில் ஏற்பட்ட தகராறு... ஒருவர் கொலை!

PT WEB

பெரம்பலூர் மாவட்டம் சோலை நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (48). இவர் தனது சகோதரர் ஆறுமுகத்துடன் இணைந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சொந்தமாக டிஃபன் கடை வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு வேலை முடிந்து சேகர் மது அருந்தியுள்ளார். பின் தன் கடை வாசலில் தூங்கியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட சேகர்

அப்போது மது போதையில் வந்த மற்றொருவர், தூங்கிக் கொண்டிருந்த சேகரை தட்டி எழுப்பியதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த சேகர், அந்த நபரை தகாத வார்த்தையால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி, உடனே அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து சேகர் தலையில் அடித்துள்ளார். அதில் படுகாயமடைந்த சேகர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேகர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தகவல் அறிந்து கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதனை அடுத்து கொலை வழக்கு பதிவு செய்த கோயம்பேடு போலீசார், இவ்வழக்கில் தொடர்புடைய கோயம்பேடு நெற்குன்றம் பகுதியை சேர்ந்த சக்தி (22) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் தெரியவந்தது என்ன?

கோயம்பேடு கீரை மார்க்கெட்டில் வேலை பார்த்து வரும் சக்தி நேற்று இரவு மதுபோதையில் தனது நண்பரை பார்ப்பதற்காக ஆறுமுகம் டிபன் கடை சென்றுள்ளார். அப்போது தன் நண்பர் என நினைத்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த சேகரை எழுப்பியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சேகர், சக்தியை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். சக்தி உடனடியாக அருகில் இருந்த பீர்பாட்டிலை எடுத்து சேகர் தலையில் அடித்து கொலை செய்துள்ளார்.

கொலை

இச்சம்பவத்தை அடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் கஞ்சா போதையின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், தொழிலாளிகள் நிம்மதியாக மார்க்கெட்டில் உறங்க முடியவில்லை எனவும் தொழிலாளிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், இரவு நேரத்தில் போலீசார் கோயம்பேடு மார்க்கெட்டில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் தொழிலாளிகள்.