குற்றம்

நடுரோட்டில் போக்குவரத்து காவலரை பேஸ்பால் மட்டையால் தாக்கிய நபர்

நடுரோட்டில் போக்குவரத்து காவலரை பேஸ்பால் மட்டையால் தாக்கிய நபர்

webteam

பெங்களூருவில் செல்போனில் பேசிக் கொண்டே காரை ஓட்டியவரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலரை அந்த நபர் பேஸ்பால் மட்டையால் தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பெங்களூருவில் கடந்த வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு சர்ஜாபூர் ரிங் ரோட்டில் போக்குவரத்து காவலர் பீமாசங்கர் பணியில் இருந்தார். அப்போது, செல்போனில் பேசிக்கொண்டே ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் வந்துள்ளார். உடனே பீமாசங்கர், காரை நிறுத்தினார், அவர் சீட்பெல்ட் போடவில்லை என்பதையும் காவலர் கவனித்து, அதுகுறித்து கேட்டுள்ளார். உடனே கோபமடைந்த அந்த நபர், காவலரை தகாத வார்த்தைகளால் திட்டி, கார் டிக்கியில் இருந்து பேஸ்பால் மட்டையை எடுத்து காவலரை கடுமையாக தாக்கினார். அப்போது, சாலையில் நடந்து சென்றவர்கள் ஓடி வந்து தடுத்துள்ளனர். பின்னர் அந்த நபர் காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர், விசாரித்தபோது தான், அந்த நபரின் பெயர் திலீப் என்றும் அவர் அப்பகுதியில் பாத்திரக்கடை வைத்திருப்பவர் என்பது தெரிய வந்துள்ளது.

தாக்குதலுக்கு ஆளான காவலர் கொடுத்த புகாரின் பேரில், திலீபின் கார் எண்ணை வைத்து திலீப்-ஐ அடையாளம் கண்டறிந்தது காவல்துறை. திலீப் மீது காவலரை தாக்கியது, அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் குற்ற வழக்கு உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ நேற்று முதல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.