குற்றம்

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா கைது

webteam

அருப்புகோட்டை அருகே மனநலம் பாதித்த 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியை அடுத்த வெற்றிலைமுருகன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரோஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).  மனநலம் பாத்திக்கப்பட்ட 17 வயதான இவர் பள்ளிக்கு செல்லாமல் தனது கிராமத்தில் ஆடு மேய்த்து வந்துள்ளார். இந்தச் சூழலில் அதே கிராமத்தைச் சேர்ந்த கருப்பு என்பவர், ரோஜா தனிமையிலிருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் இவர் தொடர்ந்து சில மாதங்களாகவே ரோஜாவிடம் பாலியல் ரீதியில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அந்தச் சிறுமி கருவுற்றுள்ளார்.

இந்நிலையில் அச்சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். ஆகவே விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத சிறுமியின் பெறோர்கள் உறவினர்களின் ஆலோசனை படி சிறுமியை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர்களிடம் கர்ப்பத்தை கலைக்க கேட்டுக் கொண்டனர்.

இதற்கு மருத்துவர்கள் சிறுமி 7 மாத கர்ப்பமாக உள்ளதால் இனி கருக்கலைப்பு செய்ய முடியாது. மீறி அவ்வாறு கருக்கலைப்பு செய்தால் சிறுமியின் உயிருக்கு ஆபத்தாகி விடும் என்று கூறியுள்ளனர். பின்னர் இது தொடர்பாக பெற்றோர்கள் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது வெற்றிலைமுருகன்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பு என்றும் இவர் அந்தச் சிறுமிக்கு சித்தப்பா முறை என்பதும் தெரியவந்தது. பின்னர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.