குற்றம்

குடும்பத் தகராறில் அக்கா கணவரை அடித்துக் கொலை செய்த இளைஞர் கைது

குடும்பத் தகராறில் அக்கா கணவரை அடித்துக் கொலை செய்த இளைஞர் கைது

webteam

குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கத்தில் தகராறில் ஈடுபட்ட மாமாவை கம்பியால் அடித்துக் கொலை செய்த மைத்துனர் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் நந்தம்பாக்கம், சாந்தி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (45). சென்ட்ரிங் வேலை செய்து வந்த இவருக்கு திருமணமாகி தேவி (35) என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வெங்கடேசன் மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

ஒரு கட்டத்தில் தேவியை விட்டுப் பிரிந்து, வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, தனியாக சென்றுவிட்டார். இந்த நிலையில், நேற்று மீண்டும் குடிபோதையில் தேவி வீட்டிற்கு சென்றவர், அவரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது வீட்டில் இருந்த தேவியின் தம்பி சதீஷ்குமார் (30) இதனை தட்டிக் கேட்டுள்ளார். இதில், வெங்கடேசனுக்கும் சதீஷ்குமாருக்கும் இடையை தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் கைகளால் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த சதீஷ் அருகில் கிடந்த கம்பியை எடுத்து வெங்கடேசனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த வெங்கடேசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்த வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் கொலை வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சதீஷ் குமாரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கொலை செய்யப்பட்ட வெங்கடேசன் மீது சென்னை, மதுரவாயல் காவல் நிலையத்தில் கொலை, அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. குடும்பத் தகராறில் மாமாவை மைத்துனரே கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.