மதுராந்தகம் அருகே பழங்குடி இருளர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, கொலை மிரட்டலும் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த காவாதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி தேவி (வயது 35). இவர்கள் இருவருக்கும் 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். நேற்று இரவு 9 மணிக்கு குடும்பத்துடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு விட்டு அனைவரும் உறங்க சென்றுள்ளனர். நள்ளிரவு 12 மணிக்கு தேவியின் அருகில் யாரோ படுப்பது போல தெரியவே அந்த நபரை தள்ளிவிட்டு சத்தம் போட்டு கூச்சலிட்டு உள்ளார். மனைவியின் சத்தத்தைக் கேட்டு எழுந்த முருகன், செல்போன் டார்ச்சை அடித்து பார்த்துள்ளார். அப்போது அந்நபர் அதே கிராமத்தைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவர் தெரிந்துள்ளது.
சுதாரித்துக்கொண்ட சுந்தரேசன், உடனடியாக தேவி மற்றும் அவரது கணவரை தாக்கிவிட்டு அசிங்கமாக பேசியுள்ளதாக தெரியவந்துள்ளது. தொடந்து, “நடந்ததை யாரிடமாவது வெளியே சொன்னால், பெட்ரோல் ஊற்றி இப்பகுதியிலுள்ள உங்கள் இருளர் சமூகத்தின் அனைத்து குடிசைகளையும் கொளுத்தி விடுவேன்” என மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
சம்பவத்துக்குப்பின் இவ்விவகாரம் தொடர்பாக, சித்தாமூர் காவல் நிலையத்தில் தேவி புகார் கொடுத்துள்ளார். அவரின் புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுல்ராஜ், தலைமறைவாக இருந்த சுந்தரேசனை கைது செய்து அவர் மீது அவதுராக பேசியது, சாதிய வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.