காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஏலக்காய்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஷீபா என்ற 25 வயது இளம்பெண். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த ஏப்ரல் 23ம் தேதி வீட்டைவிட்டுச் சென்ற ஷீபா, மீண்டும் வீடு வந்து சேரவில்லை எனச் சொல்லி ஒரகடம் காவல் நிலையத்தில் ஷீபாவின் தந்தை அமல்ராஜ் புகாரளித்திருக்கிறார்.
அதன் பேரில் காணாமல் போன ஷீபாவை தேடுவதற்கான விசாரணையில் போலீசார் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது ஷீபாவின் செல்ஃபோன் எண்ணை வைத்து விசாரித்ததில் பண்ருட்டியைச் சேர்ந்த சாமுவேல் (26) என்பவர்தான் அவரிடம் கடைசியாக பேசியிருக்கிறார் என்பது காவல்துறைக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் சாமுவேலை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தியிருக்கிறார். அப்போது சாமுவேல், “ஷீபாவுக்கும் எனக்கும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தது. இடையே ஷீபாவின் தோழியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு அவருடனும் காதலில் இருந்து வந்தேன்.
இதனால் ஷீபாவுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறும் வந்திருக்கிறது. இதுபோக தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு ஷீபா என்னை வற்புறுத்தினார். நான் மறுத்தேன்.
இந்த நிலையில்தான் கடந்த ஏப்ரல் 24ம் தேதியன்று நாங்கள் இருவரும் வெளியூருக்கு காரில் சென்று பொழுதை கழித்துவிட்டு சுங்குவார் சத்திரம் அருகே உள்ள கோவளவேடு ஏரிக்கு சென்றோம்” என்றுள்ளார். அந்த நேரத்தில் ஷீபாவை ஏரிக்கு சாமுவேல் அழைத்துச் சென்றிருக்கிறார்.
அங்கு வைத்து ஷீபாவை தன் பனியனால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, உடலை ஏரியின் மதகுக்கு அடியில் வீசிச் சென்றுவிட்டு சாமுவேல் தலைமறைவானது, விசாரணையின் போது அம்பலமாகியிருக்கிறது.
இதனையடுத்து சாமுவேலை கைது செய்த போலீசார், நிகழ்விடத்திற்கு அவரை அழைத்துச் சென்று கொல்லப்பட்ட ஷீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஒரகடம் போலீசார், சாமுவேல் மீது வழக்குப்பதிந்து சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.