அமெரிக்காவின் சிக்காகோவில் 61 வயது நிரம்பிய சிமியோன் ஹென்ட்ரிக்சன். இவர் இப்பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றார். இவரது மனைவி லாரி ஹென்ட்ரிக்சன் வயது 60.
நியூயார்க் போஸ்ட் அறிக்கையின் படி ஜூலை 15 அன்று, 61வயது நிரம்பிய சிமியோன் என்பவர் தனது துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென அதிலிருந்து துப்பாக்கியின் தோட்டா வெளிப்படவே அருகில் இருந்த அவரது மனைவியான லாரி ஹென்ட்ரிக்சனின் மீது பாய்ந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிமியோன் தனது மனைவியை தாக்கிய துப்பாக்கியாலேயே சம்பவ இடத்திலேயே தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் கிடைத்த தகவலின் பேரில் தெரிவித்தனர். சிமியோன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனால், அவரது மனைவி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பிறகு உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டார் .
ஏபிசி என் அறிக்கையின்படி சிமியோன் போலீசாரை அழைத்தாரா அல்லது துடுப்பாக்கின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாரை அழைத்தனரா என்று உறுதியான தகவல் கிடைக்கவில்லை. தனது பெற்றோரின் மறைவின் துயரை முகநூலில் பதிவிட்டுள்ள இவர்களது மகன் டெரெக் ஹென்ட்ரிக்சன் ,"என் பெற்றோர் அனைவரின் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவர்கள் , இவர்கள் போல சிறந்த பெற்றோர் இல்லை " என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இது போன்ற சம்பவம் நடந்து இருப்பது புதிதல்ல. இந்த மாதத்தின் தொடக்கத்தில் காலிஃபோர்னியாவை சேர்ந்த 3 வயது குழந்தை ஒன்று தவறுதலாக தனது 1 வயது சகோதரியை சுட்டு கொன்றுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . இச்சம்பவம் குறித்து அக்குழந்தையே போலீசாரிடம் அலைபேசியில் தெரிவித்துள்ளது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அத்துப்பாக்கியை கைப்பற்றினர்.
- ஜெனிட்டா ரோஸ்லின்