குற்றம்

பீரோ உடைக்கப்படாமல் வைரக் கம்மல் திருட்டு.. விசாரணையில் சிக்கிய பணிப்பெண்!

kaleelrahman

சென்னை மாங்காட்டில் வேலை செய்த வீட்டிலேயே நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார். 

சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரலு, இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு வேலூரில் உள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது தாங்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றி பீரோவில் வைக்கும் போது ஒரு வைர கம்மல் மற்றும் 4 பவுன் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


இதுகுறித்து மாங்காடு போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் மாங்காடு போலீசார் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். அங்கு பீரோவின் கதவு உடைக்காமல் இருந்ததை கண்ட போலீசார் அந்த வீட்டில் வீட்டு வேலை செய்யும் அம்பிகா, என்பவரை சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருடர்களை கண்டுபிடிக்க கைரேகை எடுக்க வேண்டும் என போலீசார் கூறியதால் பயந்து போன அம்பிகா பீரோவில் இருந்து நகையை திருடியதை ஒப்புக்கொண்டார்.

விசாரணையில் பீரோ திறந்து இருந்தபோது ஏற்கெனவே ஒரு நகையை எடுத்ததாகவும் அதனை அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. நகை அதிக அளவில் இருந்ததால் மேலும் எடுத்தால் யாருக்கும் சந்தேகம் வராது என நினைத்து நகையை திருடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  மகனின் திருமணத்திற்காக மருமகளுக்கு போட வைத்திருந்த வைர கம்மலை எடுத்ததால் அம்பிகா சிக்கி கொண்டார்.

இதையடுத்து அவரிடமிருந்து வைர கம்மல் மற்றும் 4 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.