குற்றம்

மூதாட்டிக்கு அதிக நீரிழிவு மாத்திரைகளை கொடுத்து கொள்ளை முயற்சி - பெண் கைது

மூதாட்டிக்கு அதிக நீரிழிவு மாத்திரைகளை கொடுத்து கொள்ளை முயற்சி - பெண் கைது

PT

மூதாட்டிக்கு அதிக நீரிழிவு மாத்திரைகளை கொடுத்து நகைகளை திருடிச் சென்ற பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், அவரிடமிருந்து 8½ சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் அடுத்த சிறுசேரி பகுதியில் வசித்து வருபவர் திருமூர்த்தி. இவரது மாமியார் ராஜலட்சுமி (62) என்பவருக்கு உதவியாக இருக்கப் பெண் ஒருவரை பணியமர்த்தியுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மூதாட்டிக்கு அதிக அளவு நீரிழிவு நோய் மாத்திரைகளை கொடுத்து மயக்கமடைய செய்துள்ளார் பணிப்பெண். பின்னர், மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலி, வளையல்கள் என சுமார் 8½ சவரன் தங்க நகைகளை பணிப்பெண் களவாடிச் சென்று விட்டார்.

இதுகுறித்து தாழம்பூர் காவல் நிலையத்தில் திருமூர்த்தி புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து கே.கே.நகரை சேர்ந்த பணிப்பெண் விஜயலட்சுமி (46) என்பவரை, செல்ஃபோன் சிக்னலை வைத்து தாழப்பூர் ஆய்வாளர் வேலு தலைமையிலான போலீசார் கைதுசெய்தனர். பின்னர் அவரிடமிருந்து 8½ சவரன் தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைசெய்யப்பட்ட பணிப்பெண் விஜயலட்சுமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். வீட்டு வேலைக்கு ஆட்களை சேர்க்கும் போது அவர்கள் குறித்த முழு விவரங்கள் மற்றும் குற்ற பிண்ணனிகள் குறித்து தெரிந்துகொண்டு பணியமர்த்த தாழம்பூர் போலீசார், பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.