வள்ளியூரில் நகை கடையில் 47 பவுன் நகை, 2 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (50). இவர் வள்ளியூர் ராதாபுரம் மெயின் ரோட்டில் ஜூவல்லரி கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் 4 பேர் வேலை பார்த்துவரும் நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த ராமச்சந்திரன், சரியாக கடைக்கு வருவதில்லை.
இந்நிலையில் கடையில் உள்ள நகைகளை சோதனை செய்தபோது அவற்றில் சில நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நகைக்கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் ராமச்சந்திரன் கண்காணித்தார்.
அப்போது நகைக்கடையில் வேலை பார்த்த கலந்தபனை அருகே உள்ள கோரியூர் கிராமத்தைச் சேர்ந்த சுபா என்ற பெண் நகைகளை திருடியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகளின் இருப்பை சரிபார்த்த போது அதில், 47 பவுன் தங்க நகை, 4 கிலோ எடையுள்ள வெள்ளி நகைகளும் குறைவாக இருந்தது தெரியவந்தது.
இது குறித்து வள்ளியூர் காவல் நிலையத்தில் ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நகை கடையில் வேலை பார்த்த சுபாவை கைது செய்து அவரிடம் இருந்து நகைகள் அனைத்தையும் மீட்டனர். மேலும் தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.