மதுரையில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொம்மையை விற்பனை செய்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் யானையின் தந்தத்தால் ஆன பொருட்கள் மற்றும் பொம்மைகள் விற்பனை செய்யப்படுவதாக மதுரை மண்டல வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில், வனத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், மதுரை வடக்கு தாலுகாவிற்கு உட்பட்ட குலமங்கலம் பகுதியைச் சேர்ந்த பொன் இருளன் (எ) முத்து மற்றும் பீட்டர் சகாயராஜ் ஆகிய இருவர் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மையை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைக்கு, சாத்தூரைச் சேர்ந்த ரஞ்சித் ராஜா என்பவர் தான் உரிமையாளர் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வனத்துறை மற்றம் காவல்துறையினர், ரஞ்சித்ராஜா, பொன் இருளன், பீட்டர் சகாயராஜ் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
அத்துடன், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொமையை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ரஞ்சித் ராஜாவுக்கு யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மை எவ்வாறு கிடைத்தது, யானைகளை கொன்றுள்ளார்களா, யானை தந்தம் கடத்தல் கும்பலுக்கும், இவர்களுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள இரண்டு பேரை வனத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.