Accused pt desk
குற்றம்

மதுரை: வருமான வரித்துறை அதிகாரி எனக்கூறி பணமோசடி – கார் ஓட்டுநர் கைது

webteam

செய்தியாளர்: மணிகண்டபிரபு

திண்டுக்கல் நாட்டாண்மைக்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் குமார். இவர் மதுரை மாவட்டம் நகரி பகுதியில் உள்ள மறுவாழ்வு மையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நடந்து முடிந்த தேனி நாடாளுமன்றத் தேர்தலின் போது தற்காலிக ஓட்டுநராக வருமானவரித் துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் வேலை பார்த்து வந்துள்ளார்.

Arrested

இந்நிலையில் தென் மாவட்டங்களான மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய வணிக மற்றும் நகைக் கடைகளை குறிவைத்தும், தொழிலதிபர்கள், நிறுவன உரிமையாளர்கள் ஆகியோரிடம் “உங்களிடம் வருமானவரித் துறை சோதனைக்கு வர உள்ளார்கள். லட்சக்கணக்கில் பணம் கொடுத்தால் சோதனை எதுவும் மேற்கொள்ளாமல் பார்த்துக் கொள்கிறேன்” எனக்கூறி தொடர்புகொண்டு இவர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில், மதுரை கீழவெளி வீதியில் உள்ள ஸ்ரீவாசவி ஜீவல்லர்ஸ் கடையின் மேலாளர் சரவணன் என்பவருக்கும், தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள ஸ்ரீ ஜெயபிரபா ஜீவல்லர்ஸ் கடைக்கும், தேனியில் உள்ள நட்டத்தி நாடார் மருத்துவமனைக்கும், கம்பம் ஸ்ரீகுமார் ஹோட்டல் மற்றும் ஆர்த்தி பேக்கரி உரிமையாளர் கார்த்திகேயன் ஆகியோருக்கும் போன் செய்து வருமானத் துறை அதிகாரி போல் பேசியுள்ளார்.

Police station

இது தொடர்பாக வருமானவரித் துறை அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் புஷ்பராஜ் விளக்குத்தூண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து விளக்குத்தூண் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகரியில் உள்ள மறுவாழ்வு மையத்தில் இருந்த விக்னேஷ் குமாரை கைது செய்து செய்தனர்.

விக்னேஷ் குமார் வருமானவரித் துறையில் பணிபுரிவதாக தெரிவித்து மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தொழிலதிபர்களை போன் மூலமாக பேசி மிரட்டி பணமோசடி செய்வதை வழக்கமாக கொண்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விக்னேஷ் குமார் மட்டுமே இந்த மோசடியில் ஈடுபட்டரா? அல்லது வேறு ஐடி பிரிவு அதிகாரிகளுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணையை செய்ய உள்ளனர்.