குற்றம்

பெருந்துறை நிதிநிறுவன மோசடி வழக்கு - சிறப்பு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம்

பெருந்துறை நிதிநிறுவன மோசடி வழக்கு - சிறப்பு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம்

கலிலுல்லா

பெருந்துறை நிதிநிறுவன மோசடி வழக்கை சிறப்புப் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கழனிவாசல் பகுதியைச்சேர்ந்த பானு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். எங்கள் வீட்டின் அருகில் குடியிருந்த சோமசுந்தரம், புதுக்கோட்டையை சேர்ந்த செல்வி என்பவரை எனக்கு அறிமுகம் செய்தார். பின்னர் அவர்கள் மூலமாக பெருந்துறையில் நிதி நிறுவனம் நடத்தி வரும் தர்மராஜ் பழக்கமானார்.
அந்த நிதிநிறுவனத்தில் பொதுமக்கள் செலுத்தும் தொகையை வெளிநாடுகளில் முதலீடு செய்வதால் அந்த தொகை இரட்டிப்பாக கிடைக்கிறது என்றனர். அந்த நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 6 மாதத்தில் இரட்டிப்பாக கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறினர். மேலும் முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தினால், 10 சதவீத கமிஷன் தருவதாகவும் கூறினர்.

இதையடுத்து நிறுவனத்தில் செலுத்திய தொகைக்கு ரசீது கொடுத்தனர். நான் 18 லட்சம் முதலீடு செய்தேன். நண்பர்கள், உறவினர்கள் மூலமாக மொத்தம் 1 கோடியே 68 லட்சம் செலுத்தியிருந்தோம். அவர்கள் தெரிவித்ததைப்போல சில முதலீடுகளுக்கு 6 மாத காலக்கெடு முடிந்ததால், அந்த தொகையை திருப்பி கேட்டபோது கொடுக்காமல் இழுத்தடித்தனர். பலமுறை அவர்களை தொடர்பு கொண்டபோதும் பணத்தை கொடுக்கவில்லை. பின்னர் எங்களை ஏமாற்றியது தெரிந்தது.

எங்களைப்போல மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான பேரிடம் சுமார் 300 கோடி வரை வசூலித்துள்ளனர். இதுகுறித்து கடந்த ஆகஸ்டு மாதம் சிவகங்கை மாவட்ட குற்றத்தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் இந்த வழக்கை பொருளாதார குற்றத்தடுப்புப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன் மனுதாரர் சம்பந்தப்பட்ட வழக்கு மதுரையில் உள்ள பொருளாதார குற்றத்தடுப்புப்பிரிவுக்கு மாற்றப்படுகிறது. இந்த வழக்கு ஆவணங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.