செய்தியாளர்: பிரசன்னா
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி (59) பழைய எலெக்ட்ரானிக் பொருட்களை சர்வீஸ் செய்யும் தொழிலை செய்து வரும். இவர், மதுரை கே.கே.நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் இவரது வீட்டில் இருந்து நேற்று முன்தினம் மெத்தபெட்டமைன் மற்றும் அதனுடன் தொடர்புடைய மூலப்பொருட்கள் என மொத்தம் 10 கிலோவிற்கு மேல் பொட்டலமாக பறிமுதல் செய்தனர். இதையடுத்து தமீம் அன்சாரியை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், தமீம் அன்சாரியின் வீட்டை போதைப் பொருள் பாதுகாக்கும் இடமாக சென்னையை சேர்ந்த அன்பு மற்றும் திருச்சியை சேர்ந்த அருண் ஆகியோர் பயன்படுத்தி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அடிக்கடி மதுரைக்கு வந்து போதைப் பொருளை வைத்துவிட்டு செல்வதும், சில நாட்களுக்குப் பிறகு எடுத்துச் செல்வதுமாக இருந்துள்ளனர். இதனை காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்த நிலையில், போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
அன்பு, அருண் இருவரும் நைஜீரியா நபர்களிடம் போதைப் பொருட்களுக்கான மூலப் பொருட்களை வாங்கி தமீம் அன்சாரி வீட்டில் பதுக்கி வைத்துள்ளனர். பின்னர் தேவைக்கேற்ப எடுத்துச் சென்றுள்ளனர். அதேபோல் ஒரு கிராம் போதைப் பொருளை ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள அன்பு மற்றும் அருண் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடிவரும் நிலையில், அவர்களை இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினால், அவர்களுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது தெரியவரும். இதனிடையே புழல் சிறையில் உள்ள நைஜீரியர்களிடமும் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.