குற்றம்

போலி பேஸ்புக் கணக்கு மூலம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: சென்னை நபர் கைது

போலி பேஸ்புக் கணக்கு மூலம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: சென்னை நபர் கைது

kaleelrahman

மதுரையில் பெண் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி ஆபாச பதிவுகளை பதிவிட்டு, பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவரின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் சமூக வலைதளங்களில் போலியான கணக்கை உருவாக்கி அதன் மூலமாக ஆபாசமான பதிவுகளை கடந்த ஓராண்டிற்கு மேல் பதிவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், மிக குறைந்த விலையில் தமிழகம் முழுவதும் பெண்கள் சப்ளை செய்யப்படும் என்று பதிவேற்றியதோடு, வாட்ஸ் அப் மூலம் அந்த பெண்ணை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து குற்றவாளியை கைது செய்வதற்காக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பெயரில் காவல் ஆய்வாளர் சார்மிங் ஒய்ஸ்லின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையை தீவிரபடுத்தினர்.

இதைத் தொடர்ந்து சென்னை ஆவடியை சேர்ந்த குமார் என்பவரை நேற்று கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில், குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில், அதில் உறவுக்கார மதுரையை சேர்ந்த பெண் தலையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார் உறவுக்கார பெண்ணின் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி வக்கிரமாக பதிவிட்டு தொந்தரவு கொடுத்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட குமார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து இதுபோன்று போலியான கணக்குகளின் மூலமாக ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக குமாரின் செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

இது குறித்து அறிக்கை வெளியிடடுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், பொதுமக்கள் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வோடு இருக்கவும், சைபர் குற்றங்களால் பொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டால் அது குறித்து அச்சமின்றியும், தயக்கமின்றியும் காவல் துறையினரை அணுகி புகார் அளிக்கலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.