குற்றம்

மதுரை: மத்திய சிறையில் இருந்த தப்பியோடிய கைதி.. 6 நாட்களுக்கு பின் திருப்பூரில் கைது

மதுரை: மத்திய சிறையில் இருந்த தப்பியோடிய கைதி.. 6 நாட்களுக்கு பின் திருப்பூரில் கைது

kaleelrahman

மதுரை மத்திய சிறையில் இருந்து தப்பியோடிய ஆயுள் தண்டனை கைதி 6 நாள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் திருப்பூரில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் - தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதி என்கிற அருண்குமார் (49). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஈரோட்டில் மூதாட்டி ஒருவரை கொலை செய்த வழக்கில் கோவை சிறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை கைதியாக இருந்து வந்துள்ளார்.

இவருக்கு கடந்த 2021 அக்டோபர் 20 ஆம் தேதி ஈரோடு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, 2021 நவம்பர் 14 ஆம் தேதி மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதையடுத்து மதுரை சிறையில் அவருடைய நன்னடத்தை நடவடிக்கைகளின் அடிப்படையில் தோட்ட வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடத்த ஜூன் 16 ஆம் தேதி காலை அவரது மனைவி பாண்டிச்செல்வி சிறையில் ஆதியை சந்தித்து விட்டு சென்ற பின்னர், சிறை வளாகத்தில் உள்ள டி.ஐ.ஜி வீட்டின் அருகே தோட்ட வேலை செய்து கொண்டிருந்தவர் தப்பி ஓடியுள்ளார்.

உடனடியாக சிறைக்காவலர்கள் அவரது சொந்த ஊருக்குச் சென்று தேடியதில் ஆதி அங்கு வரவில்லை என அவரது மனைவி தெரிவித்த நிலையில், மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், 6 நாள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் திருப்பூரில் உறவினர் ஒருவரின் வீட்டில் அவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.