மதுரையில் வணிக வரித்துறையினர் சோதனையின்போது ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா சிக்கிய நிலையில், கஞ்சா கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை வண்டியூர் சோதனை சாவடி அருகே வணிக வரித்துறை இணை ஆணையர் இந்திரா, வணிகவரித்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரி ரவிநாத் வர்மா ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சரக்கு ஆட்டோ (டாட்டா ஏஸ்) வாகனத்தை தடுத்து நிறுத்தியபோது அது நிற்காமல் சென்றது.
இதனால் சந்தேகமடைந்த வணிக வரித்துறை அதிகாரிகள் வாகனத்தை பின் தொடர்ந்து விரட்டிச் சென்று ஒத்தக்கடை விவசாய கல்லூரி அருகே மடக்கி பிடித்தனர். இதையடுத்து வாகனத்தை சோதனையிட்ட போது வாகனத்தில் 420 பண்டல்களில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 1 டன் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களையும் வாகனத்தையும் பறிமுதல் செய்த வணிக வரித் துறையினர் உடனடியாக காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்திற்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக அங்கு வந்த காவல்துறை காண்காணிப்பாளர் சிவபிரசாத் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் ஓட்டுநர் பிரகாஷை கைது செய்து கஞ்சா எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.