குற்றம்

தங்கையை கேலி செய்தவனை கண்டித்த அண்ணனுக்கு சொந்தங்கள் கண்முன்னே நடந்த கொடூரம்!

தங்கையை கேலி செய்தவனை கண்டித்த அண்ணனுக்கு சொந்தங்கள் கண்முன்னே நடந்த கொடூரம்!

webteam

மதுரையில் தங்கையை கேலி செய்தவரை கண்டித்த அண்ணனை, மனைவி மற்றும் மகளின் கண் முன்பாகவே ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை யாகப்பாநகர் மீனாட்சி தெரு பகுதியை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் கூலித்தொழிலாளியான வாசுதேவன், தனது மனைவி ராதிகா மற்றும் 3 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் டைல்ஸ் ஒட்டும் வேலைக்காக அவ்வப்போது கேரள மாநிலத்திற்கு குடும்பத்துடன் சென்று அங்கு தங்கிவிட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மதுரையிலுள்ள சொந்த வீட்டிற்கு திரும்பியுள்ளனர். வாசுதேவனின் சகோதரி பூபதிக்கு மணிகண்டன் என்பவருடன் திருமணம் முடித்துவைத்து, அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், அவர்களும் வாசுதேவனின் குடும்பத்தினருடன், கேரளாவில் பணி நிமித்தமாக தங்கியிருந்து விட்டு மதுரைக்கு திரும்பியுள்ளனர்.

இதனிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக வாசுதேவனின் சகோதரி பூபதியை, அவரது கணவரான மணிகண்டனின் நண்பர் அரவிந்தன் என்பவர் கேலிகிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாசுதேவன் அரவிந்தனை அடித்து கண்டித்துள்ளார். இந்த பிரச்னை காரணமாக வாசுதேவனுக்கும், அரவிந்தனுக்கும் இடையே பகை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டின் முன்பாக, வாசுதேவன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அமர்ந்திருந்துள்ளார். அப்போது அங்குவந்த அரவிந்தன் மற்றும் 5 பேர் கொண்ட கும்பலானது, வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து வாசுதேவனை வெட்ட முயன்றுள்ளனர். அப்போது குடும்பத்துடன் வீட்டிற்குள் சென்று கதவை சாத்திய நிலையிலும், கதவை உடைத்த கும்பல் வாசுதேவனை வெட்டியுள்ளனர். இதனையடுத்து வீட்டில் இருந்து வெளியேறிய வாசுதேவன், அங்கும் இங்கும் ஓடியபோதும் விடாமல் விரட்டி விரட்டி அந்த கும்பல் வெட்டியுள்ளனர்.

இதனையடுத்து அருகில் இருந்த அயர்னிங் கடைக்குள் சென்று சேருக்கு கீழ் பதுங்கிய வாசுதேவனை கண்டுபிடித்த அந்த கும்பல், அங்கயே வைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். ரத்தவெள்ளத்தில் கிடந்த வாசுதேவனை, அவரது மனைவி அங்கிருந்த பொதுமக்கள் உதவியோடு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துசென்றபோது, அங்கு சில நிமிடங்களிலயே சிகிச்சை பலனின்றி வாசுதேவன் உயிரிழந்தார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற அண்ணாநகர் காவல்துறையினர் விசாரணை நடத்தியநிலையில், கொலை சம்பவத்தில் தொடர்புடைய மதுரையை சேர்ந்த முத்துக்குமார், கணேஷ்பாண்டி, இந்துகுமார் ஆகிய 3 பேரை கைது செய்த நிலையில், வழக்கின் முக்கிய குற்றவாளியான அரவிந்தன் உள்ளிட்ட இருவரை தேடிவருகின்றனர்.