குற்றம்

மதுரை: டிராவல்ஸ் அலுவலகத்தில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ குட்கா பறிமுதல் - 4 பேர் கைது

webteam

மதுரையில் தனியார் டிராவல்ஸ் அலுவலகத்தில் பண்டல் பண்டலாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் கஞ்சா, குட்கா, புகையிலைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் காவல் துறையினர் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகர் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாகவும், தாரளமாக கிடைப்பதாகவும் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து, தனிப்படை காவல்துறையினர் தெற்கு வெளி வீதி பகுதியிலுள்ள தனியார் டிராவல்ஸ் (SRS TRAVELS) அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து டிராவல்ஸ் அலுவலகத்தில் பார்சல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் சோதனை செய்தபோது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ குட்கா மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து தெற்குவாசல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் கர்நாடகாவில் இருந்து கடத்திவந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து முகமது ஆசிக், சதாம் உசேன், அன்வர், ஊழியர் வல்லவன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஓட்டுநர்களான ராமு, மற்றும் ஜனார்தனன் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் குட்கா புகையிலைக்கு தடை இல்லாததால் அங்கு ஆர்டர் செய்து டிராவல்ஸ் மூலம் அதனை பெற்று விற்பனை செய்வதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மதுரையில் தனியார் டிராவல்ஸ் அலுவலகத்தில் இருந்து 300கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.