குற்றம்

சிறுவாச்சூர் கோயில் பணிக்காக பணம் வசூல்-கார்த்திக் கோபிநாத்துக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு

சிறுவாச்சூர் கோயில் பணிக்காக பணம் வசூல்-கார்த்திக் கோபிநாத்துக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு

ச. முத்துகிருஷ்ணன்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்கு நன்கொடை வசூலித்து மோசடி செய்த வழக்கில் தனிப்பட்ட கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்கு மக்களிடம் ரூ.33 லட்சம் நன்கொடை வசூலித்து மோசடி செய்ததாக யூடியூபர் கார்த்திக் கோபிநாத் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோயில் பெயரை பயன்படுத்தி, இணையதளம் மூலம் நன்கொடை வசூல் செய்த புகாரில் யூடியூப் சேனல் உரிமையாளர் கார்த்திக் கோபிநாத், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கார்த்திக் கோபிநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். சிதிலமடைந்த கோயிலை சரி செய்ய அரசு முயற்சிக்கவில்லை என்பதால் தாமே கோவிலை சரி செய்ய கோரிக்கை விடுத்ததை ஏற்று மக்கள் பணம் அளித்தனர் என்றும் பணம் கொடுத்தவர்கள் யாரும் புகாரளிக்கவில்லை என்றும் கார்த்திக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பியூஸ் மனுஷ் அளித்த புகாரின் படி 3 மணி நேரம் விசாரணை நடத்தி, எந்த தவறும் செய்யவில்லை என காவல்துறையினர் கூறிவிட்டதாகவும் கார்த்திக் கோபிநாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காவல்துறையினர் தரப்பில் வசூல், செலவு ஆகியவற்றில் உடைந்தயாக இருந்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் கார்த்திக் கோபிநாத்தை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று தனியாக ஒரு மனுவை தாக்கல் செய்தனர். மேலும் கோவிலுக்கு நன்கொடை வசூலிக்க தொடங்கியதும் கார்த்திக்கின் தனிப்பட்ட கணக்கில் கூடுதல் பணம் வந்துள்ளதாகவும், செயலி மூலம் பணம் வசூலித்ததே குற்றம் தான் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தனிப்பட்ட கணக்கின் விவரங்களை தாக்கல் செய்ய கார்த்திக் கோபிநாத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரு மனுக்கள் மீதான விசாரணை ஜூன் 13க்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.