நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் Twitter
குற்றம்

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, KKSSR சொத்துக்குவிப்பு வழக்கு: தாமாக முன்வந்து விசாரிக்கும் நீதிமன்றம்!

அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துகுவிப்பு வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் தற்போது மறு விசாரணைக்கு எடுத்துள்ளது .

PT WEB

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கை தாமாக முன்வந்து மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்,

ஏற்கெனவே அமைச்சர் பொன்முடி மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கை மறுவிசாரணைக்கு இதேபோல நீதிமன்றம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மற்றொருபக்கம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கானது ஏற்கெனவே தூத்துக்குடியில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் வழக்குப் பின்ணணி என்ன?

2006 இருந்து 2011 ஆம் ஆண்டு வரை நடைப்பெற்ற திமுக ஆட்சி காலத்தில், அமைச்சர்களாக இருந்த இவர்கள், வருமானத்திற்கு எதிராக சொத்து சேர்த்ததாக 2012 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது இவ்வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் தரப்பிலும், அவர்களது குடும்பத்தினர் தரப்பிலும் மற்றொரு வழக்கு தொடுக்கப்பட்டது.

அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்

அதை ஏற்றுக்கொண்ட கீழமை நீதிமன்றம், அவர்களையும் அவர்களது குடும்பத்தினர்களையும் விடுதலை செய்தது. பின் வழக்குகள் மேல்முறையீடு செய்யப்படாத நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இவ்வழக்கினை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார்.

எம்.பி, எம்.எல்.ஏ.க்களின் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி என்ற வகையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னதாக பொன்முடி வழக்கை தாமாக முன்வந்து விசாரித்திருந்தார். அப்படி தற்போது அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வழக்கையும் விசாரணைக்கு எடுத்து இருக்கின்றார். இன்று அவரின் விசாரணையில் இவ்வழக்கை பட்டியலிடப்பட்டுள்ளது. விசாரணை செய்யும்போது, எக்காரணங்களின் அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துள்ளார் என்று அவர் சொல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

அமைச்சர் பொன்முடி வழக்கு விசாரிக்கப்பட்டது ஏன்?

விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்த அமைச்சர் பொன்முடியின் வழக்கானது வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அவ்வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டார். பொதுவாக கீழமை நீதிமன்றம் விசாரித்து வழங்கும் குற்றவியல் சம்பந்தப்பட்ட வழக்குகளில், தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டால்தான், அதன் அடிப்படையில் அவ்வழக்கு மறுவிசாரணைக்கு தாக்கல் செய்யப்படும்.

ஆனால் பொன்முடி சம்பந்தப்பட்ட வழக்கில் ‘நீதிமன்றங்களில் வழக்கு மாற்றப்பட்டதில் முறைகேடு இருக்கின்றது’ என்று கூறப்பட்டு, அதன் அடிப்படையில்தான் மீண்டும் வழக்கானது விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

அமைச்சர் பொன்முடி

அதன் அடிப்படையிலேயே தற்போது 3 வழக்குகளையும் ஒரே நீதிபதி விசாரணைக்கு எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பொன்முடி வழக்கானது அவர் மற்றும் அவரது மனைவியின் விளக்கம் கேட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் மீதான வழக்குகள் மறுவிசாரணைக்கு எடுக்கப்பட்டு இன்று விசாரணைக்கு வருகிறது.

- ஜெனிட்டா ரோஸ்லின். S