குற்றம்

குற்றம்சாட்டிய பெண் மூலம் ராக்கி கட்டிகொள்ள வேண்டும்: பாலியல் வழக்கில் கைதானவருக்கு ஜாமீன்

குற்றம்சாட்டிய பெண் மூலம் ராக்கி கட்டிகொள்ள வேண்டும்: பாலியல் வழக்கில் கைதானவருக்கு ஜாமீன்

EllusamyKarthik

மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் பாலியல் வழக்கில் கைதான குற்றவாளிக்கு நூதன முறையில் ஜாமீன் கொடுத்துள்ளார்.

‘தனது வீட்டுக்குள் நுழைந்த பக்கத்து வீட்டுக்காரர் ‘விக்ரம் பக்ரி’ தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்’ என கடந்த ஏப்ரல் மாதம் மத்திய பிரேதசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் பட்டபச்லானா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அந்த புகாரை விசாரித்த போலீசார் குற்றம்சாட்டப்பட்ட விக்ரம் பக்ரியை கடந்த ஜூன் மாதம் சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தை அணுகினார் பக்ரி. அதை விசாரித்த நீதிபதி ரோஹித் ஆர்யா கடந்த ஜூலை 30 அன்று சில நிபந்தனைகளோடு அவருக்கு ஜாமீன் கொடுத்துள்ளார். 

பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று ‘பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பேன்’ என உறுதி மொழி கொடுத்து, ரக்ஷாபந்தன் தினத்தன்று அவர் கையால் ‘ராக்கி’ கட்டிக் கொள்ள வேண்டும். அதோடு ரக்ஷாபந்தன் வழக்கப்படி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பதினோறாயிரம் ரூபாயை பக்ரி கொடுத்து அவரிடம் ஆசீர்வாதமும் பெற வேண்டும். 

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைகளுக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுத்து துணி மணிகள் வாங்க சொல்ல வேண்டும். அதே போல இனிவரும் நாட்களில் பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாப்பேன் என்ற வாக்குறுதியையும் ஏற்க வேண்டுமென்ற நிபந்தனைகளை நீதிபதி விதித்திருந்தார். 

பக்ரியை விடுவிப்பதற்காக கீழ் நீதிமன்றத்தில் ஐம்பதாயிரம் ரூபாயை ஜாமீன் தொகையாக செலுத்தவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர் அவரது மொபைல் போனில் ஆரோக்யா சேது அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யவும், தனி நபர் இடைவெளியோடு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.