குற்றம்

காதலி ஆணவக்கொலை செய்யப்பட்டதாக காதலன் புகார்: பெண்ணின் தாய் உட்பட 7 பேர் சிறையில் அடைப்பு

காதலி ஆணவக்கொலை செய்யப்பட்டதாக காதலன் புகார்: பெண்ணின் தாய் உட்பட 7 பேர் சிறையில் அடைப்பு

webteam

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே காதலி ஆணவக் கொலை செய்யப்பட்டதாக காதலன் புகார் அளித்திருந்த நிலையில், மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மாணவியின் தாயார் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் விவேக்(20). பெயிண்டராக உள்ளார். விவேக்கும் திருவரங்குளம் அருகே உள்ள இடையன்வயலைச் சேர்ந்த நாகேஸ்வரன் என்பவரது மகள் சாவித்திரியும்(19) கடந்த 8 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்களது காதல் விவகாரம் சாவித்திரியின் வீட்டுக்கு தெரிந்ததால் அவரது தாயார் மற்றும் அவரது உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதனையடுத்து விவேக்கும் சாவித்திரியும் வீட்டிற்கு தெரியாமல் ஒரு வாடகை காரில் கோயம்புத்தூருக்கு புறப்பட்டுள்ளனர்.

குளித்தலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது விவேக்கும் சாவித்திரியும் சென்ற காரை நிறுத்தி விசாரித்துள்ளனர். இதனையடுத்து சாவித்திரியும் விவேக்கும் போலீசாரிடம் நடந்ததை கூறியுள்ளனர். இதனையடுத்து போலீசார் இருவரது வீட்டாரையும் அழைத்து விவேக்கிற்கு 21 வயது முழுமையாக நிறைவடையாததால் தற்போது திருமணம் செய்ய முடியாது என்றும் அதனால் சாவித்திரியை பெற்றோரிடம் போகும்படியும் கூறி உள்ளனர். ஆனால் அதற்கு சாவித்திரி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகின்றது. இதனையடுத்து சாவித்திரியை எந்த ஒரு துன்புறுத்தலும் செய்யக்கூடாது என்று அவரது பெற்றோரிடம் எழுதி வாங்கிக்கொண்டு சாவித்திரியை அவரது பெற்றோர்களிடமே  காவல்துறையினர் அனுப்பியதாக கூறப்படுகின்றது.

இதைத்தொடர்ந்து கடந்த 12-ம் தேதி காலை விவேக்கின் உறவினர்களுக்கு இடையவயல் பகுதியிலிருந்து சாவித்திரி உயிரிழந்து விட்டதாகவும் இரவோடு இரவாக சாவித்திரியின் உறவினர்கள் அவரது உடலை எரித்து இறுதி சடங்குகளை முடித்து விட்டதாகவும் தகவல் வந்துள்ளது. இதுகுறித்து விவேக் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். மேலும், சாவித்ரியை ஆணவக்கொலை செய்து விட்டு யாருக்கும் தகவல் சொல்லாமல் எரித்து விட்டதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். 

இதனிடையே சாவித்திரியின் மரணத்தில் உள்ள தடயங்கள் மற்றும் சடலத்தை அவரது பெற்றோர்கள் வருவாய்த் துறையினருக்கு தெரிவிக்காமல் மறைத்து விட்டதாக திருவரங்குளம் கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா புகார் அளித்திருந்தார். இதன்பேரில், உயிரிழந்த சாவித்திரியின் தாயார் சாந்தி பெரியம்மா விஜயா மாமா முருகேசன் பெரியப்பா நடேசன், முருகேசன் தாய்மாமன் சிதம்பரம் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் மாணவி சாவித்திரியின் தாயார் சாந்தி மற்றும் பெரியம்மா விஜயா ஆகிய இருவரும் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாகவும், அவரது தாய் மாமன் முருகன்,பெரியப்பா நடேசன், மற்றும் உறவினர்கள் சிதம்பரம், சின்னத்தம்பி, ரெங்கசாமி ஆகிய 5 பேரும் சாவித்திரி இறந்ததற்கான தடயங்கள், மற்றும் சடலத்தை மறைத்து எரித்ததாகவும் மொத்தம் 7 பேரையும் ஆலங்குடி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் இன்று கைது செய்தனர். பெண்கள் இருவரையும் திருச்சி மத்திய பெண்கள் சிறையிலும் ஆண்கள 5 பேரையும் புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலையிலும் அடைத்தனர்.