குற்றம்

லீஸ்க்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து மோசடி : வீட்டு உரிமையாளர்கள் ஜாக்கிரதை

லீஸ்க்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து மோசடி : வீட்டு உரிமையாளர்கள் ஜாக்கிரதை

webteam

சென்னையில் குத்தகைக்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்த கும்பலை கா‌வல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொரோனா காலத்தில் நடைபெற்ற வீடு குத்தகை நூதன மோசடி குறித்து வீடியோ கால் மூலம் ‌காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை ந‌டத்திய காவல்துறையினர் கிழக்கு தாம்பரத்தில் செயல்பட்டு வந்த சன் சைன் பிராபெர்டீஸ் ( SUN SHINE PROPERTIES) என்ற நிறுவனம் ஓஎல்எக்ஸ் (OLX), நோ புரோக்கர் (NO BROKER) ஆகிய தளங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.

காலியாக உள்ள வீடுகளை வாடகைக்கு பிடிக்கும் இந்நிறுவனத்தினர் பின்னர் தாங்களே ‌உரிமையாளர் போல் குறிப்பிட்ட தளங்களில் விளம்பரம் செய்துள்ளனர். அதைப் பார்த்து தொடர்பு கொள்பவர்களிடம் வீட்டை பொறுத்து 4 முதல் 12 லட்சம் ரூபாய் வரை குத்தகை பணத்தை வசூலித்துக் கொண்டு தப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். இந்த உண்மைகள் அனைத்து காவல்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது.

இந்த மோசடியில் ஈடுபட்ட சன் சைன் பிராபெர்டீஸ் நிறுவனத்‌தைச் சேர்ந்த பிரகாஷ்,‌ காயத்ரி மற்றும் விக்னேஷ் ‌ஆகியோர் கைது செய்யப்‌பட்டுள்ளனர். இந்தக் கும்பல் ரூ.2 கோடி அளவிற்கு மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மோசடி செய்த பணத்தை வியாபாரம் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.