குற்றம்

யோகா ஆசிரியரை கொலை செய்து கழிவறைக்குள் வைத்து புதைத்த வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை!

webteam

யோகா ஆசிரியரை கொலைசெய்து கழிவறைக்குள் வைத்து அடக்கம் செய்துவிட்டு, அதனால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி காரணமாக வழக்கறிஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் திருமங்கலம் கற்பகநகர் அருகே உள்ள ஆறுமுகம் நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன்(45). இவரது மனைவி விஜி (35). இவர்களுக்கு ஹரிபிரியா  ( 10) என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற நிலையில், ஹரிகிருஷ்ணன் தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.

அதே போல் பசும்பொன் தெருவில் தனது கணவனை பிரிந்து தனது தந்தையுடன் வாழ்ந்து வந்த சித்ரா தேவி யோகா ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். ஹரிகிருஷ்ணனின் மகள் ஹரிபிரியா சித்ராதேவியிடம் யோகா பயின்று வந்த நிலையில், அங்கு சென்று வந்த ஹரிகிருஷ்ணனுக்கும் சித்ரா தேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி சித்ராதேவி இரு சக்கர வாகனத்துடன் காணவில்லை எனக்கூறி சித்ராதேவியின் தந்தை திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 05-ஆம் தேதியன்று புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கண்ணையா, ஹரிகிருஷ்ணனும்  சித்ராதேவியும் பேசிய தொலைபேசி ஆடியோவை காவல்துறையினரிடம் கொடுத்துள்ளார். ஆனால் காவல்துறையினர் விசாரணையில் அலட்சியம் காட்டியதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் இன்று காலை கடிதம் ஒன்றை எழுதிவைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எழுதிய கடிதத்தில், சித்ராதேவியை கொலை செய்து கழிவறையில் வைத்து புதைத்து இருப்பதாகவும், கொலை செய்த குற்றத்தை ஏற்கமுடியாமல் தனக்கு இவ்வாறான தண்டனையை வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் சித்ராதேவியின் இருசக்கர வாகனம் மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள சைக்கிள் நிறுத்துமிடத்தில் நிற்பதாகவும் எழுதியிருந்தார்.

காவல்துறையினரின் அலட்சியப் போக்கினால் தான், தனது மகளின் உயிர் பலியாகியுள்ளதாக சித்ரா தேவியின் தந்தை குற்றம்சாட்டியதுடன், தனக்கு நீதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.