சென்னையை குப்பைத்தொட்டி இல்லாத நகரமாக மாற்ற சென்னை மாநகராட்சி நிர்வாகம் பொறுப்புடன் பல தரப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. குப்பைகளை வகைப்படுத்தி பிரித்து குப்பைத்தொட்டிகளில் போடுதல் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் பல விசயங்களில் கவணம் செலுத்தி மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அவ்வகையில் கொளத்தூர் தொகுதியில் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் குப்பை கிடங்கு ஒன்று அமைப்பதற்கான நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி இறங்கியது.
அப்போது அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று வெற்றி என்பவரும் உடன் இன்னொருவரும் சேர்ந்து குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த நிலம் தங்களுக்கு தான் உரிமையானது என்று உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும் மற்றும் தீர்வு அதிகாரி பிறப்பித்த உத்தரவையும் இணைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்ற உத்தரவின்படி நிலம் வெற்றி உள்ளிட்ட இருவருக்கு தான் சொந்தமானது என்றும், அதனால் அந்த இடத்தில் சென்னை மாநகராட்சி குப்பை கிடங்கு அமைக்க கூடாது எனவும் உத்தரவிட்டது. இந்நிலையில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து நிலம் அவர்களுக்கு சொந்தமானது என உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவை பெற்றுள்ளார்கள் என்று கூறி, இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த குளருபடி வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், போலி ஆவணங்கள் மூலம் வெற்றி என்பவர் நிலத்தை தங்களுக்கு சொந்தமானது என உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளது நிரூபணமாகியுள்ளதாக தெரிவித்தார். மேலும் உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
பின்னர் அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கும்படியும், போலி ஆவணங்கள் பயன்படுத்தி உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவை பெற்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.