Accused pt desk
குற்றம்

கும்பகோணம்: தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக ராணுவ வீரர் உட்பட இருவர் கைது

webteam

செய்தியாளர்: கு.விவேக்ராஜ்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு குத்தாலம் அருகே செயின் பறிப்பில் ஈடுபட்டதாக கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தை சேர்ந்த வசந்த் (26), சிவா (35) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வசந்த் இந்திய ராணுவத்தில் திரிபுரா மாநிலத்தில் பணியாற்றி வருவதும், கடந்த ஆறு ஆண்டுகளாக விடுமுறைக்கு சொந்த ஊரான கும்பகோணத்திற்கு வரும்போதெல்லாம் தனது நண்பரான சிவாவுடன் சேர்ந்து கும்பகோணம், திருவிடைமருதூர், குத்தாலம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது.

Jewel seized

இதையடுத்து கும்பகோணம் தனிப்படை போலீசார் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் வழிப்பறி செய்த நகைகளை வசந்த் தன்னுடைய ராணுவ வீரர் அடையாள அட்டையை காண்பித்து கும்பகோணம் மோதிலால் தெரு மற்றும் நாகேஸ்வரன் கோவில் வீதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் அந்த தனியார் நிதி நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று விற்பனை செய்த 14 பவுன் நகைகளை மீட்டனர். தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கும்பகோணம் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூரில் 15 பவுன் நகை வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் திருவிடைமருதூர் தனிப்படை போலீசார் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.