Accused  pt desk
குற்றம்

கும்பகோணம்: கிராம கோவில்களை நோட்டமிட்டு சாமி நகைகளை திருடியதாக இருவர் கைது

பாபநாசம் கிராம பகுதிகளில் உள்ள கோவில்களில் சாமி கும்பிடுவது போல் நோட்டமிட்டு சாமி நகைகளை திருடி வந்த இருவரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

webteam

செய்தியாளர்: விவேக்ராஜ்

கும்பகோணம் மற்றும் பாபநாசத்திலுள்ள கிராம பகுதிகளில் உள்ள கோவில்களில் சாமி கும்பிடுவது போல் நோட்டமிட்டு சாமி நகைகளை திருடி வந்த இருவரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பாபநாசத்தில் கிராம பகுதிகளில் உள்ள சில கோவில்களில் அம்பாள் மற்றும் சுவாமி நகைகள் தொடர்ந்து திருடப்பட்டு வந்துள்ளன. இது தொடர்பாக தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ்ராவத் உத்தரவின் பேரில், கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் மேற்பார்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சிவசெந்தில் குமார் மற்றும் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

Jewels Seized

அப்போது கொள்ளை நடந்த கோவில்களுக்கு கிராம பகுதிக்கு தொடர்பில்லாத இருவர் அடிக்கடி வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் கும்பகோணம் பாபநாசம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள சிறு சிறு கோவில்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குச் சென்று சந்தேகத்திற்கிடமான வகையில் புதிய நபர்கள் யாரேனும் ஊருக்குள் வந்தால் தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியிருந்தனர்.

அதன்படி கும்பகோணம் அருகே கருப்பூர் கிராமத்தில் உள்ள இரு நபர்கள் கோவிலைச் சுற்றி நோட்டமிட்டு வருவதாக கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்த அங்கு சென்ற தனிப்படை போலீசாரை கண்டவுடன் இருவரும் தப்பி ஓடியுள்ளனர். அவர்களை விரட்டிப் பிடித்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அவுலியா நகரைச் சேர்ந்த சாகுல் ஹமீது (36) மற்றும் ராஜ்குமார் (35) என்பது தெரியவந்தது.

Police station

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அதிக ஆள்நடமாட்டம் இல்லாத கிராம கோவில்களுக்குச் சென்று சாமி கும்பிடுவது போல் அம்பாள் மற்றும் சுவாமி கழுத்தில் அணிந்துள்ள நகைகளை நோட்டமிட்டு, இரவு நேரத்தில் பூட்டை உடைத்து சுவாமி நகைகளை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 22 கிராம் தங்க நகைகள், இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.