குற்றம்

கும்பகோணம்: கொலை குற்றவாளிக்கு சாகும் வரை தூக்குத் தண்டணை – நீதிமன்றம் தீர்ப்பு

கும்பகோணம்: கொலை குற்றவாளிக்கு சாகும் வரை தூக்குத் தண்டணை – நீதிமன்றம் தீர்ப்பு

kaleelrahman

கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல கொலை வழக்கில் தொடர்புடைய ராஜா என்ற கட்ட ராஜாவுக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு விரைவு நீதிமன்ற நீதிபதி, சாகும்வரை தூக்குத் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கினார்.

கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் தேதி கும்பகோணம் திப்பிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்நாதன் என்பவர் கும்பகோணம் மன்னார்குடி புது பாலம் அருகே கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து கும்பகோணம் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடைபெற்றதாக தெரியவந்தது. இதில் சம்பந்தப்பட்ட கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற கட்ட ராஜா, மாரியப்பன், ஆறுமுகம், செல்வம், மனோகரன், ஆகியோர் கைது செய்யப்பட்டு, இந்த வழக்கின் விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய மனோகரன் மற்றும் மாரியப்பன் ஆகியோர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டனர். ராஜா என்ற கட்ட ராஜா உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளிகள் என சாட்சிகளின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் காவல்துறை மூலம் நிரூபிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை இன்று கும்பகோணம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் நீதிபதி பெஞ்சமின் வழங்கினார். இதில் பல்வேறு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜா என்ற கட்ட ராஜாவுக்கு சாகும்வரை தூக்குத் தண்டனையும் மூன்றாவது மற்றும் ஐந்தாவது குற்றவாளிகளான ஆறுமுகம் மற்றும் செல்வம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இது இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.