குற்றம்

ஆட்டோ டிரைவர் கொலை விவகாரம்: தம்பியே ஆள் வைத்து அண்ணனை கொலை செய்தது அம்பலம்!

ஆட்டோ டிரைவர் கொலை விவகாரம்: தம்பியே ஆள் வைத்து அண்ணனை கொலை செய்தது அம்பலம்!

webteam

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே ஆட்டோ டிரைவர் கொலை தொடர்பாக, தலைமறைவான அவரது தம்பி உள்பட 2 பேரை கைது செய்துள்ளது காவல்துறை.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அண்ணாசாலையை அடுத்துள்ள தொட்டல்லா ஆற்றை ஒட்டியுள்ள வீட்டின் அருகிலுள்ள விவசாய நிலத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கடந்த 21ஆம் தேதி இரவு முரளி (37) என்ற ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டார். இதுபற்றி நடந்த விசாரணையில், அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவருடைய தம்பி உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை சேர்ந்தவர் முரளி. ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்த இவர், 10ஆண்டுகளுக்கு முன்பு மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்துக்கொண்டதால், பெற்றோர் ஏற்காமல் முரளி குடும்பத்துடன் தனியாக வசித்து வந்தார். பிறகு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முரளி மனைவியை பிரிந்து மகள் கார்த்திகாவுடன் (11) வசித்து வந்தார்.

இந்த நிலையில் அஞ்செட்டி அண்ணாசாலையை அடுத்து தொட்டல்லா ஆற்றை ஒட்டியுள்ள வீட்டின் அருகிலுள்ள விவசாய நிலத்தில் கடந்த 21ஆம் தேதி, தனது மகளுடன் நின்றுகொண்டிருந்திருக்கிறார் முரளி. அங்கு வீச்சரிவாளுடன் வந்த மர்ம நபர், முரளியின் வலது தொடை மற்றும் வலது வாய் பகுதியில் பலமாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைக்கண்ட அவருடைய மகள் தனது தாத்தாவிற்கு தகவல் தெரிவித்ததையடுத்து போலீசாருக்கும், ஊர் பொதுமக்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு சென்றனர். அங்கு அஞ்செட்டி போலீசார் முரளியின் உடலை கைபற்றி உடற்கூறாய்விற்க்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தம்பி தேவராஜ், நிலத்தகராறில் தனது அண்ணனை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான தேவராஜை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில், பதுங்கி இருந்த தேவராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தேவராஜ், தனது நண்பரான சின்ன மேனகரம் பகுதியை சேர்ந்த அசோக் (28) உடன் சேர்ந்து முரளியை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அசோக்கையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.