கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதியொருவர் இறந்த விவகாரத்தில், தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் மறைந்த அந்த விசாரணை கைதியின் தாய் செய்தியாளர் சந்திப்பின்போது, தன் மகனுக்கு சிறுநீர் கழிக்கும் இடத்தில் வீக்கம் ஏற்படும் அளவுக்கு தாக்குதல் நடந்துள்ளது என குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொடுங்கையூரில் வீடு ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் அலமாதியைச் சேர்ந்த ராஜசேகரை காவல்துறையினர் சமீபத்தில் விசாரித்துள்ளனர். அப்போது அவர் செங்குன்றத்தில் உள்ள தனது கூட்டாளியிடம் அந்த நகைகள் இருப்பதாக கூறியதாகவும், அதன்பேரில் காவல்துறையினர் அங்கு சென்று பார்த்ததாகவும், இருந்தபோதிலும் நகைகளை மீட்கமுடியவில்லை என்றும் தெரிகிறது. இந்த நிலையில், ராஜசேகரை கொடுங்கையூர் புறக்காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையிலிருந்த ராஜசேகருக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் அதனால் அவர் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
விசாரணை கைதியொருவர் லாக்-அப்பில் மரணித்த விவகாரம், பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து ராஜசேகரிடம் விசாரணை செய்த காவலர்கள் யார் யார், எங்கு வைத்து விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரித்ததாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமைக் காவலர்கள் ஜெயசேகர், மணிவண்ன், காவலர் சத்திய மூர்த்திய ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ராஜசேகரின் சந்தேக மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாஜிஸ்திரேட் விசாரணையும் நடந்தது. அது முடிந்த பின்னர் மறைந்த ராஜசேகரின் அம்மா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், “இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காவலரிடமும் இருந்து ரூ.2 லட்சம் வீதம் 10 லட்சம் வாங்கித்தருவதாக வக்கீல் கூறினார். எதுவாக இருந்தாலும், எங்களுக்கு நியாயப்படி நீதிப்படி சட்டத்துக்குட்பட்டே அனைத்தும் நடக்க வேண்டும். அதில் நாங்கள் தீர்மானமாக உள்ளோம். என் மகன் இறப்பு விஷயத்தில், சம்பந்தப்பட்ட அந்த ஐந்து காவலர்களையும் கைது செய்தால்தான், நாங்கள் எங்கள் மகனின் உடலை வாங்குவோம். என் மகனின் ஒரு கை உடைந்திருக்கிறது. ஒரு விரலில் பெரும் காயம் உள்ளது. போலவே காலில் தொடையில் பலமாக ரத்தக்கட்டு உள்ளது. சிறுநீர் கழிக்கும் இடத்தில் பெரிய வீக்கமும் உள்ளது. இந்த காயங்கள் பற்றிய விவரங்களை, நான் நீதிபதியிடம் முழுமையாக் தெரிவித்துள்ளேன்.
என் மகனை நான் காண சென்றபோது என் பெரிய மகனும் என்னோடு இருந்தான். அவன் என் மகனை தூக்கியபோது, அவன் வாயிலிருந்து ரத்தம் கொப்பளித்தது. அவ்வளவு கொடூரமாக அவனை போலீஸார் அடித்துள்ளனர். இப்போது என் மகனுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்காக, என்னிடம் யாரும் எந்தக் கையெழுத்தும் வாங்கவில்லை. அவர்களே கையெழுத்தை போட்டுவிட்டு, அவர்களே உடற்கூராய்வு செய்துள்ளனர். அந்தக் காவலர்கள் கைதாகும் வரை உடலை வாங்கமாட்டோம் நாங்கள்” என்றார்.
இந்நிலையில், உடலில் உள்ள காயங்களால் விசாரணை கைதி ராஜசேகர் இறக்கவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. மேலும் கைதி ராஜசேகரின் உடலில் மொத்தம் 4 காயங்கள் இருப்பதாக பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. திசுக்கள் மற்றும் வேதியியல் குறித்த ஆய்வு முடிவுக்கு காத்திருப்பதாகவும் பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.